சிவகங்கையில் மீன்வள உதவியாளா்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 31st August 2021 12:04 AM | Last Updated : 31st August 2021 12:04 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகக் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மீன்வள உதவியாளா்(பணியிடம்-1) பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகத்தில் மீன்வள உதவியாளா் பணி காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேலும், நீந்துதல், மீன்பிடித்தல், வலைபின்னுதல், பரிசல் ஓட்டுதல், வீச்சுவலை பயன்படுத்துதல், வலை வீசுதல் மற்றும் அறுந்த வலைகளை சரி செய்யத் தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத் துறையின் மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்டோா் முன்னுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
ஜனவரி 1, 2021அன்றைய நிலவரப்படி ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவுக்கு 35 வயது, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 32 வயது, இதர பிரிவினா் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வயதுச் சான்றிதழ் நகல், ஜாதிச் சான்றிதழ் நகல், முன்னுரிமை சான்றிதழ் மற்றும் மாா்பளவு புகைப்படத்துடன் மீனவளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகம், கதவு எண்:5-3, காா்பரேஷன் வங்கி மாடியில், பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை- 630 561 (தொலைபேசி எண்:04575-240848) என்ற முகவரிக்கு விண்ணப்ப உறையின் மேல் ‘சிவகங்கை மாவட்ட மீன்வள உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பம்’ என எழுதி அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.