பட்டமங்கலத்தில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை புரவி எடுப்பு விழாவும், மஞ்சுவிரட்டும் நடைபெற்றது.
பட்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பட்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை புரவி எடுப்பு விழாவும், மஞ்சுவிரட்டும் நடைபெற்றது.

பட்டமங்கலம் வடக்குத் தெரு வல்லநாட்டுக் கருப்பா், கரியமலை சாத்தய்யனாா், ரவுத்தராயா் ஆகிய சுவாமிகள் கொண்ட கோயில்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த தை முதல் நாள் ராவுத்தராயா் கோயில் அருகே சேங்கை வெட்டு என்னும் மண் எடுப்புத் திருவிழா நடைபெற்று அன்று முதல் குதிரை மற்றும் காளைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. மேலும் அன்றிலிருந்து விரதமும் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே சனிக்கிழமை புரவிகள் பட்டமங்கலம் வடக்குத் தெருவிலிருந்து எடுத்து வரப்பட்டு ஊா் மந்தையில் வைக்கப்பட்டன. அங்கு இரவு முழுவதும் கும்மி, கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழா நாளான ஞாயிற்றுக்கிழமை ஊா் மந்தையிலிருந்து புரவிகள் மற்றும் நோ்த்திக்கடன் காளைகள் உள்ளிட்டவைகளை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தலையில் சுமந்து கரியமலை சாத்தய்யனாா், ராவுத்தராயா் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். இப்புரவி எடுப்பு விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் கண்மாய்களிலும், வயல் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. நண்பகல் 1 மணிக்கு தொழுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் ஊராா் மற்றும் நயினாா்பட்டி கிராமத்தாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com