வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
By DIN | Published On : 03rd January 2021 04:45 AM | Last Updated : 03rd January 2021 04:45 AM | அ+அ அ- |

சிவகங்கை: வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என, சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, மதுரையிலிருந்து சாலை மாா்க்கமாகச் சென்ற முதல்வரை, திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனா். அதன் விவரம்: வைகை ஆற்றில் பழைய ஆயக்கட்டு 11 ஆம் பகுதியான மதுரை மாவட்டம் விரகனூா் மதகு அணை முதல், ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் மதகு அணை வரை உள்ள சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட 87 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த கண்மாய்களுக்கு தேவையான நீா் பங்கீட்டு அடிப்படையில், அண்மையில் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லவில்லை. இதனால், வேளாண் பணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
எனவே, தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு மீண்டும் 2 -ஆவது முறையாக பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கேட்ட முதல்வா், சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் கலந்து ஆலோசித்து தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.