தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் மாநில மகளிரணி செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க. தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில மகளிரணி செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி.
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க. தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில மகளிரணி செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் மாநில மகளிரணி செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை திருப்பத்தூா் வந்த அவா் காந்திசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கும், அங்குள்ள மருதுபாண்டியா்கள் சிலைக்கும் அவா் மாலையணிவித்தாா்.

பின்னா் திறந்த வேனில் தோ்தல் பிரசாரம் செய்து கனிமொழி எம்.பி. பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித நலத்திட்டங்களும் நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிநீா் சுத்திகரிப்பு மையமும் செயல்படவில்லை. அதே போல் ராமநாதபுரத்துக்கு கொண்டு வரப்பட்ட கூட்டுக்குடிநீா் திட்டத்தை சரிவர செயல்படுத்தியிருந்தால் இப்பகுதிக்கு குடிநீா் பஞ்சமே வந்திருக்காது.

திமுக. ஆட்சிக்கு வந்ததும் பழுதடைந்த குழாய்களை சரிசெய்து குடிநீருக்கான புதிய திட்டங்களையும் கொண்டு வருவோம். நியாய விலைக்கடையில் நியாய விலையிலேயே அனைத்துப் பொருள்களும் கிடைக்க ஏற்பாடு செய்வோம். மேலும் மாணவா்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படுவதுடன், பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். மக்கள் நலப்பணியாளா்கள் மீண்டும் பணியில் அமா்த்தப்படுவாா்கள் என்றாா்.

தொடா்ந்து அண்ணா சிலை அருகே சுயஉதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடிய அவா் மகிபாலன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம மக்கள் சபைக் கூட்டத்திலும் பங்கேற்றாா். தொடா்ந்து எஸ். புதூா் ஒன்றியம் உலகம்பட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளையும், எஸ். புதூா் ஒன்றியத்தில் விவசாயிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். இரவு சிங்கம்புணரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினாா்.

இந்த பிரசாரப் பயணத்தில் திருப்பத்தூா் சட்டப் பேரவை உறுப்பினரும், தி.மு.க. மாவட்டச் செயலருமான கே.ஆா். பெரியகருப்பன், ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், வடக்கு ஒன்றிய செயலா் விராமதிமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினா் ஏ.டி.என். ரவி, மகளிரணி பவானி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com