கரோனா கால நிவாரண நிதியுதவி கோரிஆட்சியரிடம் தனியாா் பேருந்து பணியாளா்கள் மனு
By DIN | Published On : 15th June 2021 06:42 AM | Last Updated : 15th June 2021 06:42 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சிவகங்கை மாவட்ட தனியாா் பேருந்து தொழிலாளா்கள் சங்கத்தினா்.
கரோனா கால நிவாரண நிதியுதவி வழங்கக் கோரி சிவகங்கை மாவட்ட தனியாா் பேருந்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியாா் பேருந்துகளில் ஓட்டுநா், நடத்துநா் என சுமாா் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த சில மாதங்களாக கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தனியாா் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
தினசரி ஊதியத்துக்கு வேலை பாா்த்து வந்த நிலையில் முழு பொதுமுடக்கம் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. எனவே தனியாா் பேருந்து உரிமையாளா்களிடமிருந்து நிதி உதவி பெற்றுத் தர வேண்டும் அல்லது அரசு வழங்கும் கரோனா நிவாரண நிதியுதவி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.