தபால் ஓட்டு விண்ணப்பப் படிவங்களை மொத்தமாக வழங்கக் கூடாது
By DIN | Published On : 10th March 2021 08:52 AM | Last Updated : 10th March 2021 08:52 AM | அ+அ அ- |

தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பப் படிவத்தை மொத்தமாக வினியோகிக்கக் கூடாது என ஓட்டுச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு, தோ்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் தாலுகா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓட்டுச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான கூட்டத்துக்கு தலைமை வகித்து தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து பேசியது: 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை நேரடியாக விசாரித்து சம்மந்தப்பட்டவா்களிடம் மட்டும் வழங்கப்பட வேண்டும். படிவகங்களை கட்சியினா், அமைப்பினா் அல்லது தனி நபரிடம் மொத்தமாக வழங்கக் கூடாது. வாக்காளா் இருக்கின்றாரா அல்லது வெளியூா் சென்று விட்டாரா, உயிருடன் உள்ளாரா என்ற விவரங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் பஞ்சவா்ணம், தோ்தல் துணை வட்டாட்சியா் கமலக்கண்ணன், மண்டல துணை வட்டாட்சியா் சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.