முதல்வராகவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு ப. சிதம்பரம் வாழ்த்து

முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ப. சிதம்பரம்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ப. சிதம்பரம்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத்தந்த தமிழக மக்களுக்கு நன்றியும், தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி எம்.பி அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறியதாவது: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைந்து அவரது முயற்சி உழைப்பால் இந்த பெரிய வெற்றியை பெறமுடிந்தது. எனது சார்பிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

சிவகங்கை மக்களவை தொகுதியில் இக்கூட்டணி 6 பேரவை தொகுதியில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காரைக்குடி தொகுதியில் 21,589 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச்செய்துள்ளார்கள் மகிழ்ச்சி. இதற்காக பணியாற்றிய காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றி.

இங்கு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டாம் என நினைக்கும் அளவில் புதிய சட்டபேரவை உறுப்பினர் எஸ். மாங்குடி மக்கள் பணியாற்றுவார்.

அகில இந்திய அளவில் தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் அதிகார பலம் பணபலம், பாஜக, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அமைப்பு பலம், தேர்தல் ஆணைய நெருக்கடிகள் அனைத்தையும் எதிர் கொண்டு போராடி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

அசாம் மாநிலத்தில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. அடுத்த தலை முறை தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். வரும் 5 ஆண்டுகளில் எதிர்கட்சியாக சிறப்பாக பணியாற்றி அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைய முயற்சி செய்ய வேண்டும்.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான். வாக்கு விகிதத்தில் 0.8 என்ற வாக்குகள் பெற்றிருந்தால் பின்னடைவு இருந்திருக்காது. இருப்பினும் கேரள மாநில காங்கிரஸார் சோர்வடையாமல் கட்சி பணியாற்றினால் அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பு. அதுபற்றி கருத்துக்கூற முடியாது. அகில இந்திய அளவில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், கம்யூனிஸ்ட் து.ராஜா என 13 எதிர்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து மத்திய அரசின் தவறான கொள்கை மற்றும் நடவடிக்கைகளை எதிர்த்து சுட்டிக்காட்டி வந்தால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

தேர்தலில் பணம் பட்டுவாடா என்பது மோசமான செயல். திறன் வாய்ந்தவர்கள் தேர்தல் ஆணயத்திற்கு வந்தால் தான் இதற்கு தீர்வு காணமுடியும் என்றார். இப்பேட்டியின்போது சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற எஸ். மாங்குடி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com