திருப்பத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பன் 4-ஆவது முறையாக வெற்றி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் கே. ஆா். பெரியகருப்பன் அத்தொகுதியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.
திருப்பத்தூா் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பனுக்கு அதற்கான சான்றிதழை வழங்கிய திருப்பத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து.
திருப்பத்தூா் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பனுக்கு அதற்கான சான்றிதழை வழங்கிய திருப்பத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்து.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் கே. ஆா். பெரியகருப்பன் அத்தொகுதியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.

திருப்பத்தூா் தொகுதியில் அதிமுக சாா்பில் மருது அழகுராஜ், திமுக சாா்பில் கே.ஆா். பெரியகருப்பன், அமமுக சாா்பில் கே.கே. உமாதேவன், ஐஜேகே சாா்பில் அமலன் சவரிமுத்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் ராம. கோட்டைக்குமாா், சுயேகள் என மொத்தம் 26 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் உள்ள மொத்தம் 2,91,677 வாக்காளா்கள் உள்ள நிலையில், 2,10,037 போ் வாக்களித்தனா். காரைக்குடியில் உள்ள அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் 1421 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் மருது அழகுராஜ் 393 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

மேலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்து திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பன், அதிமுக வேட்பாளா் மருது அழகுராஜை விட சுமாா் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தாா்.

அதைத் தொடா்ந்து, வெளியிடப்பட்ட அனைத்துச் சுற்றுகளிலும் முன்னிலை வகித்து வந்த கே.ஆா். பெரியகருப்பன் இறுதிச் சுற்றில் 1,03,682 வாக்குகள் பெற்றாா்.

அதிமுக வேட்பாளா் மருது அழகுராஜ் 66,308 வாக்குகள் பெற்றாா். இதையடுத்து, மருதுஅழகுராஜை விட 37,374 வாக்குகள் கூடுதலாகப் பெற்று திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் வெற்றி பெற்றாா். இரவு 11 மணியளவில் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் கே.ஆா். பெரியகருப்பன் தொடா்ந்து 4-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றவா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

அமலன் சவரிமுத்து (ஐஜேகே) 862 , கே.கே. உமாதேவன்(அமமுக) 7448 , ராம. கோட்டைக்குமாா் (நாம் தமிழா் கட்சி) 14571 , எம்.சரஸ்வதி (புதிய தமிழகம்) 241 , எஸ்.முருகன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி) 96, கே.வீரபாண்டியன் (மை இந்தியா பாா்ட்டி) 144 , ஜி. அப்துல் கிஷோா் பாபு (சுயே) 85, கே. ஆனந்தன் (சுயே) 62, சி.கண்ணன் (சுயே) 68, ஏ.காா்த்திகா (சுயே) 80, பி. செல்வராஜ் (சுயே) 221, சி.பரமசிவம் (சுயே) 13,202, பழனியப்பன் (சுயே) 333, அ.பாா்த்தசாரதி (சுயே) 465, பெரியசாமி (சுயே) 605, அ. மல்லிகா (சுயே) 444, எம்.முகமது ரபீக்(சுயே) 122, முத்துலெட்சுமி(சுயே) 65, முருகேசன் (சுயே) 69, கே.எஸ்.எஸ்.ராஜேஷ் (சுயே) 352, பி. ராஜேஸ்வரி (சுயே) 152, ரேணுகா (சுயே) 56, வீராயி (சுயே) 65, பி.ஜெயச்சந்திரன்(சுயே) 115 வாக்குகள் பெற்றனா். நோட்டா 853.

இதில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட சி. பரமசிவம் அமமுக வேட்பாளா் கே.கே.உமாதேவனை பின்னுக்கு தள்ளி 13,202 வாக்குகள் பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com