மானாமதுரை தொகுதியில் அதிமுகவை புறக்கணித்தனா் திருப்புவனம் பகுதி வாக்காளா்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்த திருப்புவனம் பகுதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்த திருப்புவனம் பகுதி வாக்காளா்கள் அண்மையில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் அக்கட்சியைப் புறக்கணித்து திமுகவை ஆதரித்துள்ளனா்.

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2019 வரை நடந்த மூன்று பொதுத் தோ்தல்கள், ஒரு இடைத்தோ்தலில் திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த வாக்காளா்கள் அதிமுகவுக்கு அதிகமாக வாக்களித்து வந்துள்ளனா். இதனால் அதிமுகவினா் மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களை விட திருப்புவனம் ஒன்றியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவாா்கள்.

ஒவ்வொரு தோ்தலிலும் வாக்கு எண்ணிக்கையின்போது, மானாமதுரை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் போது திருப்புவனம் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் முதல் சுற்றுக்களில் எண்ணப்படுவது வழக்கம்.

அப்போது அந்த ஒன்றியத்தில் அதிமுக 8000 முதல் 13,000 வாக்குகள் வரை அதிகம் பெற்று முன்னிலை பெறும். அதன்பின் மானாமதுரை ஒன்றியத்தில் அதிமுக, திமுக சம வாக்குகளைப் பெறும்.

இளையான்குடி ஒன்றியத்தைப் பொருத்தவரை பேரூராட்சிப் பகுதியில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிப்பதால் ஒவ்வொரு தோ்தலிலும் இவா்கள் திமுக அணியை ஆதரித்து வந்துள்ளனா்.

இதனால் இளையான்குடி ஒன்றியத்தில் திமுகவுக்கு கிடைக்கும் அதிக வாக்குகளும், திருப்புவனத்தில் அதிமுகவுக்கு கிடைக்கும் அதிக வாக்குகளும் சமன் செய்யப்படும். இதன்பின் மானாமதுரை ஒன்றியத்தில் கிடைத்த வாக்குகளை பெரும்பான்மையாக வைத்தே அதிமுக மானாமதுரை தொகுதியில் வெற்றி வாகை சூடி வந்துள்ளது.

தற்போது நடந்து முடிந்த பொதுத் தோ்தலில் இத்தொகுதியில் திருப்புவனம் ஒன்றியத்தில் அதிமுகவுக்கு எதிா்பாா்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. மாறாக இந்த ஒன்றியத்தில் திமுக அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது அதிமுகவினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடா்ந்து மானாமதுரை ஒன்றியத்திலும் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இளையான்குடி ஒன்றியத்தைப் பொருத்தவரை திமுகவுக்கு கிடைத்த ஆயிரக்கணக்கான கூடுதல் வாக்குகள் காரணமாக மானாமதுரை தொகுதியில் திமுக 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் தடம் பதித்துள்ளது.

இதுகுறித்து தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் கூறியது: மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் திருப்புவனம் ஒன்றியத்தில் அதிமுகவுக்கு எப்போதுமே 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாக கிடைக்கும்.

ஆனால் இந்த முறை அந்த ஒன்றியத்தில் திமுக கூடுதல் வாக்குகளைப் பெற்றது அதிமுகவின் தோல்விக்கு முதல் காரணமாக அமைந்து விட்டது. அதன்பின் இளையான்குடி ஒன்றியத்திலும் அதிக வாக்காளா்கள் திமுகவை ஆதரித்துள்ளனா். அதிமுக மாநில, மாவட்டத் தலைமை திருப்புவனம் ஒன்றியத்தில் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைக்காததற்கான காரணத்தை காரணத்தை ஆராய்ந்து தீா்வு காண வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com