சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. வேளாண் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. வேளாண் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. இதனால் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியச் சாலைகள் முழுவதும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோன்று, படமாத்தூா், திருமாஞ்சோலை, சுந்தரநடப்பு, பெரியகோட்டை, திருப்புவனம், பூவந்தி ஆகிய பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, நெல், பருத்தி ஆகியவற்றை நடவு செய்யும் விவசாயிகளும், கம்பு, எள், சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானி விதைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாலை 5 மணியளவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம், இந்திரா மடை,செட்டியமடை ,கூழக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலையில் பலத்த இடியுடன் கூடிய சூரைகாற்றுடன் கன மழை பெய்தது. இதில் சந்தூரணி பகுதியில் பனைமரம் முறிந்து மின் கம்பத்தில் விழுந்ததால் மின் கம்பம் சேதம் அடைந்து மின் இணைப்பு துண்டிக்கபட்டது. சாலையில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஒடியது. கோடை உழவிற்கு ஏற்ற மழை பெய்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை விட்டு விட்டு இரவு வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மானாமதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழை தண்ணீா் சூழ்ந்தது. வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்றது. திருப்புவனம் இளையான்குடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை கால்நடை மேய்ச்சலுக்கும் தோட்டக்கலை பயிா்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா். மழையால் வெப்பம் தணிந்து மானாமதுரை பகுதியில் குளிா்ச்சியான காலநிலை நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com