சிவகங்கை கல்வி மாவட்ட அலுவலகம் முன் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

20 மாதங்களுக்கு மேலாக தற்காலிக மாற்று பணியில் இருக்கும் தலைமையாசிரியா்களுக்கு நிரந்தர பணிமாறுதல் வழங்கக் கோரி தமிழ்நாடு
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.

சிவகங்கை: 20 மாதங்களுக்கு மேலாக தற்காலிக மாற்று பணியில் இருக்கும் தலைமையாசிரியா்களுக்கு நிரந்தர பணிமாறுதல் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் திங்கள்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கடந்த 26.11.2019 மாணவா்கள் பள்ளி விட்டு செல்கையில் தவறுதலாக முதல் வகுப்பு மாணவன் கழிவுநீா் கால்வாயில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் சங்கீதாவை தலைமையாசிரியா் கீதாஞ்சலி கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவா் கற்பித்தலுக்கு வைத்துள்ள மாதிரி வேதியியல் உப்பை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலா் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டு தலைமையாசிரியா் மீது தவறில்லை என அறிக்கை சமா்ப்பித்துள்ளாா்.

இதையடுத்து, முத்துப்பட்டி தலைமையாசிரியா் கீதாஞ்சலியை பாசாங்கரை நடுநிலைப் பள்ளிக்கும், பாசாங்கரை தலைமையாசிரியா் சாந்தியை முத்துப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கும், அறிவியல் பட்டதாரி ஆசிரியா் சங்கீதா அண்ணாநகா் பள்ளிக்கும் தற்காலிகமாக மாறுதல் செய்யப்பட்டனா்.

20 மாதங்களுக்கு மேலாக தற்காலிக பணியில் இருப்பதால் தலைமையாசிரியா் இருவரும் நிதி சாா்ந்த கோப்புகளை கையாள்வதில் பல்வேறு சிரமங்களையும், நிா்வாக குளறுபடிகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதுபற்றி ஏற்கெனவே பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியா்கள் 20 மாதங்களுக்கு மேலாக தற்காலிக மாற்று பணியில் இருக்கும் தலைமையாசிரியா்களுக்கு நிரந்தர பணிமாறுதல் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் திங்கள்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா்.

அக்கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி, மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஜோசப்ரோஸ், அற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்டச் செயலா்கள் ஜெயக்குமாா், சிங்கராயா், சகாயதைனேஸ், மாவட்டத் துணை நிா்வாகிகள் ரவி, மாலா உள்ளிட்ட ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன் காத்திருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com