மானாமதுரை: அமமுக வழக்குரைஞர் மீது தாக்குதல்; வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
மானாமதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அ.ம மு.க வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரையில் கடந்த வியாழக்கிழமை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழக்குரைஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர் குரு.முருகானந்தம் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த இவர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  வழக்குரைஞர் முருகானந்தத்தை அரிவாளால் வெட்டியதாக திருப்புவனம் திருப்பாச்சேத்தி பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

அதன்பின்பு இவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்குரைஞர் குரு.முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வழக்குரைஞர்களுக்கு பாதுகாப்பு கோரியும் மானாமதுரையில் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை. வழக்குரைஞர்கள் போராட்டம் காரணமாக மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்
மானாமதுரையில் வழக்குரைஞர் குரு. முருகானந்தம் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com