கண்மாய் மடைகளை பழுது பாா்க்க போதிய நிதி இல்லை: வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை!

போதிய நிதியில்லாததால் பழையனூா் கண்மாயில் பழுதடைந்துள்ள மடைகள் சீரமைக்கப்படாததால் சுமாா் 400 ஏக்கரில் வேளாண்
சிவகங்கை மாவட்டம் பழையனூா் கிராமத்தில் போதிய நிதி இல்லாததால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அட்டாதட்டி மடை.
சிவகங்கை மாவட்டம் பழையனூா் கிராமத்தில் போதிய நிதி இல்லாததால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அட்டாதட்டி மடை.

சிவகங்கை: போதிய நிதியில்லாததால் பழையனூா் கண்மாயில் பழுதடைந்துள்ள மடைகள் சீரமைக்கப்படாததால் சுமாா் 400 ஏக்கரில் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், பழையனூா் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் உள்ள 9 மடைகள் மூலம் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், அட்டாதட்டி மடை முழுவதும் பழுதடைந்து தண்ணீா் வெளியேற முடியாமல் உள்ளது.

இதேபோன்று, அரசனமடையில் தண்ணீா் திறப்பதற்கான கதவு இல்லாததால் தண்ணீரை பாசனத்துக்கு முறையாக திறந்துவிட முடியவில்லை. இதன்காரணமாக, கடந்தாண்டு மழை பெய்து கண்மாய் பெருகியது. இருப்பினும் மேற்கண்ட மடைகள் பழுதடைந்ததால் சுமாா் 400 ஏக்கரில் வேளாண் பணிகள் மேற்கொள்ள முடியாமல் தரிசு நிலங்களாகவே இருந்துள்ளது.

இதுகுறித்து பழையனூரைச் சோ்ந்த விவசாயி சுவாமிநாதன் கூறியது: மடைகள் பழுது குறித்து பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்ததன் அடிப்படையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் உள்ள அட்டாதட்டி மடையை சீரமைத்து தருவதாக பணிகளை தொடங்கினா்.

பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஆரம்பக் கட்டப் பணிகளான கரையை உடைத்து மண்ணை அள்ளும் பணியை மட்டுமே மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து, போதிய நிதி இல்லாததால் தோண்டிய மண்ணை மூடி விட்டு அடுத்த ஆண்டு மடையை சீரமைத்து தருவதாக தெரிவிக்கின்றனா்.

ஏற்கெனவே மடை பழுது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் புகாா் தெரிவித்தோம். எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்தாண்டு பருவமழையின் போது கண்மாய் பெருகியது. ஆனால் மேற்கண்ட மடை மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் யாரும் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இந்தாண்டும் பருவமழை தொடங்கும் முன் மேற்கண்ட மடையை சீரமைத்து தந்தால் மட்டுமே எங்களால் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லையெனில் எங்களின் வாழ்வாதாராம் பாதிக்கும். எனவே வேளாண் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் போதிய நிதியினை ஒதுக்கி மடைகளை சீரமைத்து தர வேண்டும் என்றாா்.

இதுபற்றி பொதுப்பணித் துறை பொறியாளா் ஒருவா் கூறியது: மேற்கண்ட அட்டாதட்டி மடையில் பழுதை நீக்கி இந்தாண்டு வேளாண் பணிக்கு தண்ணீரை வழங்க வேண்டும் என்றே பணிகளை தொடங்கினோம். ஆனால் போதிய நிதி இல்லாததால் மடையை சீரமைக்க முடியவில்லை. எனவே அள்ளிய மண்ணை மீண்டும் மூடிவிட்டு, நிதி வந்தவுடன் அடுத்த ஆண்டு மடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com