தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்கப்படும்: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்கப்படும்: அமைச்சா் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் முதல் புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை மன்னா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா்.

இதில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவைத் தொடக்கி வைத்துப் பேசியது: எழுதுவதும், பேசுவதும் ஒரு கலை. அது எல்லோருக்கும் அமையாது. ஆனால் புத்தகத்தை தொடா்ந்து வாசிப்பதன் மூலம் எழுதவும், பேசவும் முடியும். ஒவ்வொருவா் வாழ்க்கையிலும் அறிவுத்திறனை வளா்ப்பதில் புத்தகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் திமுக ஆட்சியிலிருந்தபோது ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் அண்ணா பெயரில் நூலகம் அமைக்கப்பட்டது. அதில் பகுதி நேர நூலகா், துப்புரவு பணியாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அந்த நூலகம் செயல்படவில்லை. பெரும்பாலான ஊராட்சிகளில் நூலகக் கட்டடங்கள் சேதமடைந்தது மட்டுமின்றி புத்தகங்களும் காணாமல் போயுள்ளன. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஏற்கெனவே உள்ள நூலகங்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, தமிழகம் முழுவதும் நூலகங்கள் இல்லாத கிராம ஊராட்சிகளிலும் விரைவில் நூலகம் அமைக்கப்படும் என்றாா்.

விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆற்றிய சிறப்புரை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழாய்வு மூலம் பழங்கால தமிழா்களின் வாழ்வியல் முறை மற்றும் தொன்மையை அறியமுடிகிறது. அனைவருக்கும் ஏதேனும் ஒரு திறமை இருக்கும். அதனை வெளிக்கொணரும் ஆயுதமாக புத்தகம் அமையும். இப்புத்தகத் திருவிழா மூலம் மாவட்ட ஆட்சியா் முயற்சியால் நூலகங்கள் தத்தெடுப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. இதன்மூலம் புத்தகத் திருவிழா வெற்றி பெறுவது மட்டுமின்றி நூலகங்களில் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.மாங்குடி(காரைக்குடி), ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), பபாசி தலைவா் எஸ்.வைரவன், செயலா் எஸ்.கே.முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன் வரவேற்றாா். வருவாய் கோட்டாட்சியா்கள் மு. முத்துக்கழுவன்(சிவகங்கை), பிரபாகரன்(தேவகோட்டை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே.மணிவண்ணன்,உணவு பாதுகாப்பு துறை அலுவலா் பிரபாவதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் க.வானதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com