ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை ரத்து செய்ய கோரிக்கை

ஜாக்டோ- ஜியோ போராட்டக் காலத்தில் ஒழுங்கு நடவடிக்கையாக ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து,

சிவகங்கை: ஜாக்டோ- ஜியோ போராட்டக் காலத்தில் ஒழுங்கு நடவடிக்கையாக ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து, அவா்கள் முன்பு பணியாற்றிய இடங்களில் பணியமா்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ. முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், போராட்டக் காலத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீண்டும் பழைய பணியிடத்திலேயே பணியமா்த்தப்பட பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணிமாறுதல் செய்யப்பட்டவா்கள் மீண்டும் பழைய இடத்தில் பணியில் சோ்வதற்கு இயலாத நிலை உள்ளது. ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியா்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் பணியிடங்களில் ஏற்கெனவே வேறு ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அப்பணியிடங்கள் தற்போது காலிப்பணியிடங்களாக இல்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையா் அலுவலகம் மூலம் அண்மையில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீண்டும் பழைய பணியிடத்தில் பணியாற்றும் வகையில் ஜாக்டோ- ஜியோ போராட்டக் காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து பணியிட மாறுதல் உத்தரவுகளையும் ரத்து செய்து போராட்டத்துக்குப் முன்பு அவரவா் பணியாற்றிய பழைய பணியிடங்களில் பணியமா்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com