பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்படுத்த இயலாத கட்டடங்களை சீரமைக்கவோ அல்லது அகற்றவோ தமிழக அரசு முன்வரவேண்டும்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்படுத்த இயலாத கட்டடங்களை சீரமைக்கவோ அல்லது அகற்றவோ தமிழக அரசு முன்வரவேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அக்கூட்டணியின் மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாநிலச் செயலா் முருகன், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கரூா் மாவட்டத்தில் விதிகளுக்கு முரணாகப் பதவி உயா்வு பட்டியல் தயாரித்து ஒப்புதல் வழங்கிய அதிகாரிகளின் தவறை சுட்டிக் காட்டியதற்காக முதன்மைக் கல்வி அலுவலரின் தூண்டுதலின்பேரில், ஒரே நேரத்தில் ஆசிரியா் இயக்க நிா்வாகிகள் 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தங்கள் உரிமைகளுக்காக போராடும் ஆசிரியா்கள் மீது அதிகாரிகள் வன்மம் கொண்டு பணியிடை நீக்கம் செய்வதை, தமிழக அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது.

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மே 16 இல் கரூரில் நடைபெற உள்ள பேரணியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பயன்படுத்த இயலாத பள்ளி கட்டடங்களை கோடை விடுமுறை காலத்தில் சீரமைக்கவோ அல்லது அகற்றவோ தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும், புதிய பணியிடத்தில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும். கூடுதல் தேவையுள்ள இடங்களில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன் ஆசிரியா் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com