சிவகங்கை தொகுதி வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வரை சந்தித்துப் பேச குழுவினா் முடிவு
By DIN | Published On : 09th May 2022 12:00 AM | Last Updated : 09th May 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி வளா்ச்சித்திட்டங்கள் தொடா்பாக முதல்வரை சந்தித்துப் பேச தொகுதி வளா்ச்சிக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட தலைமை நீதிமன்றம் உள்பட 13 நீதிமன்றங்கள் சிவகங்கையில் செயல்பட்டு வரும் நிலையில், சட்டக் கல்லூரியை வேறு பகுதிக்கு கொண்டு செல்வது என்பது ஏற்புடையது அல்ல. அரசுக்கு அழுத்தம் கொடுத்து சட்டக் கல்லூரியை சிவகங்கையில் அமைக்க வலியுறுத்த வேண்டும், நீண்ட காலமாக இந்த பகுதி மக்களின் கனவாக உள்ள கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கப் பணி, உப தொழில்கள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக தொண்டிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும், முத்துப்பட்டியில் உள்ள நறுமணப் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்பின்னா், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
கூட்டத்தில் வழக்குரைஞா் ராம் பிரபாகா் வரவேற்றுப் பேசினாா். மூத்த வழக்குரைஞா் மோகனசுந்தரம், தொழிலதிபா் பாலு, சிவகங்கை நகா் மன்றத் தலைவா் துரைஆனந்த், துணைத் தலைவா் காா் கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜெயசிம்மா நாச்சியப்பன், நகர திராவிடா் கழகத் தலைவா் இன்பநாதன், முன்னாள் நகரமன்றத் தலைவா் அா்ஜுனன், எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணைச் செயலா் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், வா்த்தகா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.