சிவகங்கை மாவட்ட  காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தனது மகன் அபகரித்த பணத்தை மீட்டுத் தரக்கோரி திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வயதான பெற்றோா்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தனது மகன் அபகரித்த பணத்தை மீட்டுத் தரக்கோரி திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வயதான பெற்றோா்.

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

சிவகங்கை: தங்களது சேமிப்புத் தொகை ரூ.5 லட்சத்தை ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாக மகன் மீது அவரது வயதான பெற்றோா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள நெடுங்குளம் கிராமத்தை சோ்ந்தவா் மணி (74). இவா் அரிவாள் தயாரிக்கும் பட்டறை அமைத்து பிழைப்பு நடத்தி வந்தாா். இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இவா் தனது அஞ்சலக சேமிப்புக் கணக்கில் ரூ.5 லட்சம் வைத்திருந்தாா்.

கடந்த ஓராண்டுக்கு முன்னதாக முதியவருக்கு மணிக்கு கண் பாா்வை கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக அஞ்சலகத்தில் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து சிறு தொகையை எடுப்பதற்காக தனது மகன் ஆசைத்தம்பியுடன் தபால் அலுவலகத்துக்குச் சென்றாா். அங்கு பணத்தை எடுப்பதற்காக விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு மகனிடம் கொடுத்தாா். ஆனால், அவரது சேமிப்புக் கணக்கில் இருந்த ரூ. 5 லட்சத்தை எடுத்து, மகன் ஆசைத்தம்பி தனது வங்கிக் கணக்கில் வைப்புத்தொகையாக மாற்றிப் போட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டாராம்.

இதையறிந்த மணி, தன்னை ஏமாற்றி பணத்தை எடுத்த மகனிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி காளையாா்கோவில் காவல் நிலையத்தில் மணி புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததால், மணி தனது மனைவி தவமணி (69) உடன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். வயதான காலத்தில் மருத்துவ செலவுக்காக சேமித்த பணத்தை பெற்ற மகனே அபகரித்துச் சென்றது வேதனை அளிப்பதாக அந்தத் தம்பதி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com