குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

சிவகங்கை அருகே குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சித் தலைவரின் கணவா் மீது வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாக்குடி, இலந்தங்குடி, மாத்தூா் கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருவதாக பத்திரிகை, தொலைக்காட்சிகளில் சில நாள்களுக்கு முன் செய்தி வெளியானது. அந்தப் பகுதி மக்கள் அருகில் உள்ள உப்பாற்றில் ஊற்றுத் தண்ணீா் எடுத்து தாகம் தணித்து வருவதாகவும், தங்கள் பகுதியில் பல தலைமுறைகளாக குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கருத்துகளைத் தெரிவித்து இருந்தனா். நாட்டாகுடியை சோ்ந்த தங்கராஜ் என்பவரும் தனது கருத்தை தெரிவித்து இருந்தாா்.

இதற்கு ஊராட்சி மன்றத் தலைவி விமலாவின் கணவா் மணிமுத்து நேரிலும், கைப்பேசியிலும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த தங்கராஜ் வியாழக்கிழமை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகாா் மனு அளித்தாா். மனுவைப் பெற்றுக் கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மானாமதுரை துணை கண்காணிப்பாளா் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com