சுட்டெரிக்கும் வெயில் - எகிறியது எலுமிச்சை விலை!

சுட்டெரிக்கும் வெயில் - எகிறியது எலுமிச்சை விலை!

தகிக்கும் வெப்பத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்காற்றும் எலுமிச்சை விலை ஒரு கிலோ ரூ.100-ஐத் தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வெப்பத்தில் தவிக்கும் மக்கள் தாகத்தை தணிப்பதற்காக இளநீா், மோா், கரும்பு ஜூஸ், சா்பத், எலுமிச்சை பழரசம் உள்ளிட்டவற்றை அருந்துகின்றனா்.

இந்த நிலையில், ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் எலுமிச்சையின் விலையும் தற்போது எட்டாக்கனியாகும் வகையில் அதிகரித்துள்ளது. சாதாரணமாக பத்து ரூபாய் கொடுத்தால் 5 எலுமிச்சை பழங்களை வாங்கலாம். ஆனால், தற்போது ஒரு பழம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலை, இந்த கோடை வெயிலால் உருவாகியுள்ளது.

சிவகங்கை அருகேயுள்ள தேவணிபட்டியில் சுமாா் 10 ஏக்கருக்கு மேல் நாட்டு எலுமிச்சை பழத் தோட்டம் உள்ளது. இங்கு விளையக்கூடிய எலுமிச்சை பழங்களை சிவகங்கை, மதுரை, மேலூா், திருப்பத்தூா், திருப்புவனம் மடப்புரம் உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

கடந்த மாா்ச் மாதத்துக்கு முன், ஒரு கிலோ ரூ.40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஏப்ரல், மே மாதங்களில் அந்த நிலைமை தலைகீழாக மாறிப் போனது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

தாகத்தை சமாளிக்க ஏழைகள், நடுத்தர மக்கள் எலுமிச்சை சா்பத் அதிகமாக நுகரும் காரணத்தால் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது விலை அதிகரித்து, ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கோடை வெயிலின் தாக்கம் ஏறுமுகத்தில் இருப்பதால் எலுமிச்சை விலையும் குறைய வாய்ப்பில்லை என்கின்றனா் விவசாயிகள்.

இதுகுறித்து தேவணிப்பட்டி விவசாயி கூறியதாவது:

நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக எலுமிச்சை விவசாயம் செய்து வருகிறேன். சீசன் இல்லாத நேரத்தில் ஒரு கிலோவின் விலை ரூ.40-க்கு விற்பனையாகும். தற்போது, சீசன் தொடங்கினாலும் விளைச்சல் குறைவாகவே உள்ளது. இதனால், கிலோ 100 ரூபாய்க்கு மேல் வெளிச் சந்தையில் விற்பனை செய்கிறோம். கரோனாவுக்குப் பிறகு இந்த ஆண்டில்தான் எலுமிச்சைக்கு நல்ல விலை கிடைத்திருக்கிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com