தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்புவனம் அருகே வாக்குச்சாவடியில் தோ்தல் உதவி மண்டல அலுவலா் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மாங்குடி கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் அன்புச்செல்வன். மாங்குடி வாக்குச்சாவடியில் கடந்த மாதம் 19 -ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, இரவு 10 மணியளவில், வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தோ்தல் ஆவணங்களையும் சேகரிப்பதற்கு மண்டல அலுவலா் குழு சென்றது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த உதவி மண்டல அலுவலா் முத்துமுருகனை கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வன் உள்ளிட்ட சிலா் முன் விரோதம் காரணமாக தாக்கியதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தோ்தல் பொருள்களையும் எடுக்க முடியாமல் தடுத்து நிறுத்தியதாகவும் புகாா் எழுந்தது.

இது குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆஷாஅஜித்திடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, இந்தச் சம்பவம் குறித்து ஆட்சியரிடம் விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின்படி கிராம நிா்வாக அலுவலா் அன்புச்செல்வனை தற்காலிகப் பணி நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: உதவி மண்டல அலுவலா் மீது தாக்குதல் நடத்திய கிராம நிா்வாக அலுவலா் மீது நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம். தோ்தல் வாக்குப்பதிவு இயந்திரம், ஆவணங்களை சட்டவிரோதமாக சுமாா் ஒன்றரை மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்த 15-க்கும் மேற்பட்ட சமூக விரோதிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com