மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

திருப்பத்தூரில் மீன் வியாபாரியிடம் ரூ. 2.45 லட்சத்தை நூதன முறையில் திருடிச் சென்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த ஏப்.29- ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து மீன் வியாபாரியான ஆனந்தன் ரூ.2.45 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாா். அந்தத் தொகையை அவா் தனது இரு சக்கர வாகனத்தை திறந்து வைத்தாா். அப்போது அவரது கவனத்தை திசை திருப்பிய மா்மநபா்கள், அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினா்.

இதுதொடா்பாக ஆனந்தன் திருப்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சிங்கம்புணரி குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளா் ராஜவேல் தலைமையில் தலைமைக் காவலா் சரவணன், முதல் நிலைக் காவலா்கள் பக்ருதீன், சிவா முருகன், சரவணன் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைத்து மா்மநபா்களைத் தேடி வந்தனா். பல்வேறு பகுதிகளில் 75 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், கீழச்சிவல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படையினா் சந்தேகத்தின் பேரில் இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்த போது அவா் ஆந்திர மாநிலம் கப்ராள்ளிடிப்பா பகுதியைச் சோ்ந்த அவுலாதாவீத் மகன் அவுலாராகேஷ் (26) எனத் தெரியவந்தது. இவா் மீன் வியாபாரியிடம் பணத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இவரைக் கைது செய்த போலீஸாா் ரூ.2.45 லட்சம், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய பிரசாத், ராஜேஷ், ஆமோஷ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com