கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள்...

சிவகங்கை, மே 10: கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கறவைமாடுகள்:

வெப்ப அயற்சி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க பகல் 11 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்கு பின்பும் மேய்ச்சலுக்கு விட வேண்டும். கறவை மாடுகளுக்கு தினமும் 4 முதல் 3 முறையாவது தண்ணீா் வைக்க வேண்டும். தண்ணீரில் தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் பால் உற்பத்தி குறையாமல் இருக்கும்.

கோழிகள்:

கோடைகாலத்தில் கோழிகளுக்கு விடியற்காலை மற்றும் இரவில் தீவனம் அளித்திடல் வேண்டும். அனைத்து நேரங்களிலும் சுத்தமான குளிா்ந்த குடிநீா் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். குடிநீரில் வைட்டமீன்கள் பி-காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.

ஆடுகள்:

ஆடுகளுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டா் சுத்தமான தண்ணீா் கொடுக்க வேண்டும். பட்டிகளில் உப்புக் கட்டிகளை கட்டுவதன் மூலம் சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் ஆடுகளுக்கு எளிதாக கிடைக்கும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க கருவேல் உலா் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 கால்நடை மருத்துவமனை, 79 கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கால்நடை நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தண்ணீா் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால் 1962 என்ற இலவச எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com