நிர்மலாதேவி பாலியல் பேர வழக்கு: நவ.20-க்கு ஒத்திவைப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் பேர வழக்கு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் பேர வழக்கு விசாரணையை, நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
     அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி, தன்னிடம் பயின்ற மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக, சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டு, மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
     இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இம் மூவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். இம் மனுக்களுக்கு சிபிசிஐடி தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
    இம் மனுக்கள் மீதான விசாரணை, வியாழக்கிழமை நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, கருப்பசாமி மற்றும் முருகன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். 
அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, இந்த நீதிமன்றத்தில் தற்போது இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றனர். அப்போது நீதிபதி, அவ்வாறு ஏதாவது உத்தரவு பெற்றிருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறி, வழக்கு விசாரணையை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com