தாயில்பட்டி, வத்திராயிருப்பு பகுதிகளில்குடிநீர் விநியோகிக்கக் கோரி போராட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி, காலிக் குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில்


விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி, காலிக் குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி இந்திராநகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, சரியாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதாகி உள்ளது. இதனையும் சரிசெய்ய ஊராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இந்திரா நகர் பகுதி பெண்கள் 15-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சனிக்கிழமை அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அறிவுறுத்தலை தொடர்ந்து, மறியலை கைவிட்டு, சாலையோரம் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
வத்திராயிருப்பில்: வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
முத்தாலம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பொ.லிங்கம் தலைமை வகித்து, போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ தி.ராமசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி., வெ.அழகிரிசாமி, ஒன்றியச் செயலாளர் சரவணன், நகரச் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து முழக்கமிட்டனர்.
இந்நிலையில், அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கும், தாமிரவருணி குடிநீரை சீராக விநியோகிக்கவும், குழாய் உடைப்புகளை சரிசெய்யவும், பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்டிகளை மாற்றி அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com