மாணவர்கள் போட்டியை சமாளிக்க நல்ல புத்தகங்களை படிப்பது அவசியம்: ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்

மாணவர்கள் உலகளாவிய போட்டியை சமாளிக்க நல்ல புத்தகங்களை படிப்பது அவசியம் என ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.


மாணவர்கள் உலகளாவிய போட்டியை சமாளிக்க நல்ல புத்தகங்களை படிப்பது அவசியம் என ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.
தினமணி நாளிதழ் மற்றும் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான சிகரத்தை வெல்வோம் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தின. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.
இதில் பாரதி கிருஷ்ணகுமார் பேசியது: வாழ்க்கையில் வெற்றி பெற புத்தக வாசிப்பு அவசியம். தாய் மொழியான தமிழை பிழை இல்லாமல் வாசிக்கவும் படிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்றால் வேலை கிடைக்கும் என்பது ஒரு புறமிருந்தாலும், வேலைக்கான தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 
மொழி அறிவு மிகவும் அவசியமாகும். ஐரோப்பிய நாடுகளில் உள்ள மாணவர்கள் 4 அல்லது 5 மொழிகளில் பேசவும் எழுதவும் செய்வார்கள். தற்போது வாசிக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, செல்லிடப்பேசியில் நேரத்தை செலவிடுவது என்பது பலரின் பழக்கமாகி விட்டது. அதனை நிறுத்த வேண்டும்.
அழகாக இருந்தால் மட்டும் போதாது. அறிவு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த அறிவைத் தருவது கல்வி. நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையிருந்து வெளியே வந்த போது,  மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?  என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் ,  வாசிப்பதற்குப் புத்தகங்கள் இருந்தால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயார் எனக் கூறினார்.
ஜப்பானில் பொது இடத்தில் யாரும் செல்லிடப்பேசியில் பேசுவதில்லை. அவர்களில் 90 சதவீதம் பேர் புத்தகம் படிக்கிறார்கள். எனவே அவர்கள் உலக அளவில் வெற்றி பெறுகிறார்கள். எனவே மாணவர்கள் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
எந்த ஒரு விஷயத்திலும் விருப்பத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும். கல்வி அறிவை வளர்த்துக் கொண்டால், எதிர்வரும் காலங்களில் உலகளாவிய போட்டிகளை சமாளிக்க இயலும். 
 யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாரதியார் கூறியிருக்கிறார். அவருக்கு 9 மொழிகளில் பேசவும், எழுதவும் தெரியும். தாய்மொழியுடன் வேறு மொழிகளையும் படிக்க வேண்டும். 
ஆங்கிலத்தில் மொத்தமாகவே 26 எழுத்துகள் தான் உள்ளன. ஆகவே அந்த மொழியைப் படிப்பது சுலபம். இன்றைய உலகில் வேலைவாய்ப்புக்கு ஆங்கில மொழித்திறன் அவசியமாகும். எனவே மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும். 
வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான படிக்கட்டுதான் அரசு பொதுத் தேர்வு. அதில் வெற்றி பெறுவது என்பதை மாணவர்கள் மனதில் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் ஆர்.சோலைச்சாமி முன்னிலை வகித்தார். இதில் கல்லூரி கல்வி இயக்குநர் பி.ஜி. விஷ்ணுராம், முதன்மையர் பி.மாரிச்சாமி, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கே.கணேசன் வரவேற்றார். தி நியூ இந்தியன் எக்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவர் (விளம்பரம்) ஜெ.விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com