விவசாயிகள் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கக் கூடாது: மீன்வள உதவி இயக்குநர் அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வகை மீன்களை

விருதுநகர் மாவட்டத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வகை மீன்களை விவசாயிகள் யாரும் வளர்க்க வேண்டாம் என்றும் மீன் வளத்துறை உதவி இயக்குநர் பிரபாத் தெரிவித்தார்.
 இதுகுறித்து வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில், உள்நாட்டு மீன்வளர்ப்பான பெருங்கெண்டை மீன்வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீன பெருங்கெண்டை மீன்வகைகளான வெள்ளிக்கெண்டை புல்கெண்டை, சாதா கெண்டை மற்றும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேபியா மீன்குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன்வளர்ப்பு பணி மேற்கொண்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். 
 இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமான தடை செய்யப்பட்டுள்ளது. 
 இந்த வகை மீன்கள், மற்ற மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை இரையாக உண்ணும் தன்மை உடையது.
 மேலும், இவை, நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்து விடும். எனவே, நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்பு உள்ளது. 
 மேலும், இந்த மீன் இனம் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிகக் குறைந்த ஆழம் உள்ள நீர் நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையது. இந்த மீன்கள், நமது பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் செய்து, அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பல்பெருக்கம் அடையும் தன்மை கொண்டது. மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இந்த மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்புள்ளது. 
 அவ்வாறு செல்லும் இந்த மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கம் அடைந்து ஒரு கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களைத் தவிர பிற மீன்கள் இல்லாத நிலை உருவாகும். இதனால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். 
எனவே, அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை விவசாயிகள் யாரும் வளர்க்க வேண்டாம். 
 இது தொடர்பான புகார்களை விருதுநகர், மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும் மீன்வளர்க்கும் விவசாயிகள் மீன்வளத்துறை மூலம் பரிந்துரை செய்யப்படும் மீன் இனங்களை மட்டுமே வளர்க்க வேண்டும். புகாருக்கு தொலைபேசி: 04562- 244707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com