சீன பட்டாசு தடைக்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்க முடியுமா: சீமான்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சீன பட்டாசு தடை செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அக்கட்சியால் அளிக்க முடியுமா என, நாம் தமிழர் கட்சி


மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சீன பட்டாசு தடை செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை அக்கட்சியால் அளிக்க முடியுமா என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 
சிவகாசியில்,  விருதுநகர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழி தேவனை ஆதரித்து, சீமான் வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
வாக்காளர்கள் எங்கள் கட்சியை ஆதரித்தால், இளைஞர்களின் படிப்புக்கு தகுந்தாற்போல் வேலைவாய்ப்பினை உருவாக்குவோம்.
விவசாயத்தை மேம்படுத்துவோம். பனையேறும் தொழிலாளி உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் வழங்குவோம்.
காற்று மாசினை ஏற்படுத்தும் வேதியியல் பொருள்களுக்கு தீர்வு காண்போம். அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் எனக் கூறுவதற்கு, நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே தகுதி உண்டு. உயிர் காக்கும் மருத்துவம், பெரிய முதலாளிகளுக்கு விற்பனை பொருளாகிவிட்டது. மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி என இலவசமாகக் கொடுத்தவர்கள் தண்ணீரை இலவசமாகக் கொடுக்காதது ஏன்?. 
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத் தொழிலுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் இதற்கு தீர்வு  காணவில்லை. 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சீன பட்டாசு இந்தியாவில் தடை செய்யப்படும்  என அக்கட்சியால் உத்தரவாதம் அளிக்க முடியமா?. இந்த அரசுகள் தொழிலை பாதுகாப்பதற்குப் பதிலாக அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. 
எனவே, எங்களது கட்சி வேட்பாளர் அருள்மொழி தேவனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நாங்கள் மாற்றத்தை கொடுப்போம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com