தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ராகுலை எதிர்ப்பார்களா?சமக தலைவர் சரத்குமார் கேள்வி
By DIN | Published On : 14th April 2019 01:27 AM | Last Updated : 14th April 2019 01:27 AM | அ+அ அ- |

கேரளத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், தமிழகத்திலும் எதிர்த்து பிரசாரம் செய்வார்களா? என்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடிகர் சரத்குமார் வாக்கு சேகரித்து பேசியதாவது:
இளைய சமுதாயத்தினர் எதிர்காலத்தில் நல்ல வாழ்வாதாரம் பெற்றிட மத்தியில் நல்ல ஆட்சி, வலுவான ஆட்சி தொடர வேண்டும். அண்டை நாடான சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள், தீவிரவாதிகளின் மிரட்டல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வலிமையான பிரதமர் வேண்டும். எனவே, பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு, 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் மாறுபட்ட கொள்கைகள், வேறுபட்ட கோட்பாடுகள் இருக்கலாம். ஆனால், மத்தியில் வலிமையான ஆட்சி வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது.
திமுக-காங்கிரஸ் ஊழல் கூட்டணி. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. திமுக தலைமையிலான கூட்டணிதான் சந்தர்ப்பவாதக் கூட்டணியாகும்.
கேரளத்தில் ராகுல் காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது இதுதான் சந்தர்ப்பவாதம் என்றார்.
ராஜபாளையம்: அதையடுத்து, ராஜபாளையத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது சரத்குமார் பேசியது: இந்தத் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும், நீதிக்கும், அநீதிக்கும் இடையேயானது. தமிழகத்தில் ஸ்டாலின் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் ராகுலை பிரதமர் வேட்பாளராக யாரும் சுட்டி காட்டவில்லை.
காவிரி, கச்சத்தீவு, ஈழப் படுகொலை என தமிழகத்தை வஞ்சித்தவர்கள்தான் திமுகவினர். காங்கிரஸ் அதற்கு உடந்தையாக இருந்தது. காவிரி நதிநீர் பிரச்னை இன்று வரை இழுபறியில் இருப்பதற்கு, காங்கிரஸ், திமுகதான் காரணம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் மிகுந்த ஆட்சியாக இருக்கும்.
எனவே, ஊழலற்ற வலிமையான அரசு மத்தியில் அமைய வேண்டுமானால், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தில், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சந்திரபிரபா ஆகியோர் உடனிருந்தனர்.