இலங்கிப்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை
By DIN | Published On : 26th April 2019 02:07 AM | Last Updated : 26th April 2019 02:07 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் இலங்கிப்பட்டியில் நிலவும் குடிநீர்த்தட்டுப்பாட்டை போக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இலங்கிப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பல வாரங்களாகியும் குடிநீர் வழங்கப்படவில்லை. இக்கிராமத்திலுள்ள கண்மாயில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க ஊராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்நீரானது உப்புநீராக இருப்பதால் பயனற்றுப் போனது. இதனால் புலியூரான் ஊராட்சி மூலம் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல மாதங்களாக மாதத்துக்கு ஒருமுறை கூட குடிநீர் வழங்கப்பட வில்லை. இதற்கு புலியூரான் ஊராட்சிக்கு முதலாவது தாமிரவருணி கூட்டுக்குடிநீர்த்திட்டம் மூலம் கிடைத்த நீர் தற்போது முறையாக வராததே காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் பற்றாக்குறையைப் போக்க செயல்பாட்டுக்கு வரவுள்ள மேலும் ஓர் புதிய தாமிரவருணிக் கூட்டுக்குடிநீர்த் திட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே வாரம் ஒருமுறை வீதம் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக புலியூரான் ஊராட்சி மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே குடிநீர் கிடைக்காததால் அதிக விலை கொடுத்துத் தனியார் நிறுவனக் குடிநீரை வாங்க வேண்டிய நிலை இருப்பதாக இலங்கிப்பட்டி கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே மாற்று ஏற்பாடுகள் செய்தாவது இலங்கிப்பட்டிக்கு வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்கவேண்டுமென அக்கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.