ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் மாடவீதிகள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் மாடவீதிகள் வழியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா, கோபாலா'  என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது. இங்கு  ஆண்டாளின் அவதார தினமானஆடிப்பூர திருநாளை முன்னிட்டு ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படும். 
அதன் அடிப்படையில் ஆடிப்பூரத் திருவிழா, ஜூலை 27 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். மேலும், தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருவீதி உலா நடைபெற்றது. 
அதேபோல், ஜூலை 31 இல் ஐந்தாம் திருநாளில், 5 கருட சேவையும், ஏழாம் திருநாளான வெள்ளிக்கிழமை ஆண்டாள் திருவடியில் ரெங்கமன்னார் சயனசேவையும் நடைபெற்றது. 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.05 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள, ஆடிப்பூரத் தேரோட்டம்  தொடங்கியது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர்நீதிமன்ற   நீதிபதி ஆதிகேசவலு, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். 
இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதிகள் வழியாக தேர் சென்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா, கோபாலா' என கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தேர் காலை 10.25 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது. இத்தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் முக்கிய வீதிகளில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு  நீர் மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. இத்தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 
இந்நிகழ்ச்சியில்  சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் சத்திய நாராயணன், பொங்கியப்பன், புகழேந்தி, பாரதிதாசன், கிருஷ்ணகுமார், ராஜமாணிக்கம், தாரணி மற்றும் விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா, கோயில் இணை ஆணையர் தனபால், அறங்காவலர் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.   
தேரோட்டத்தையொட்டி தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மதுரை டிஐஜி ஆனி விஜயா,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com