விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி பலி

விருதுநகர் அருகே ஆமத்தூர் முத்தலாபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே ஆமத்தூர் முத்தலாபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
       முத்தலாபுரத்தில் ஸ்ரீராம் என்பவருக்குச் சொந்தமான லாரா பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் அனுமதி சான்றிதழ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன. 
       இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையை சிவகாசியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் கமல்ராஜ் (45) என்பவர் குத்தகைக்கு எடுத்து, பட்டாசுகள் உற்பத்தி செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு, தினந்தோறும் 220-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். திங்கள்கிழமை மாலை, பாதி தயாரிக்கப்பட்ட நிலையில் பட்டாசுகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு தொழிலாளர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். 
      இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அறைக்குச் சென்றுள்ளனர். நான்கு தொழிலாளர்கள் வெளியே நிற்க, மத்தியசேனை பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் மாயழகன் (45) என்பவர் அறைக் கதவை திறந்துள்ளார். அப்போது, அறையில் முழுமை பெறாமல் இருந்த பேன்சி ரக வெடிகளில் உராய்வு ஏற்பட்டு வெடித்துள்ளது. இதில், மாயழகன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.       மேலும், அந்த அறை முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுந்தது. அருகிலுள்ள 4 அறைகளும் சேதமடைந்தன. 
     இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விருதுநகர் தீயணைப்புத் துறை வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மாயழகன் உடலை, பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
      சம்பவ இடத்தை, உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 
 இது குறித்து கார்சேரி கிராம நிர்வாக அலுவலர் குருபாக்கியம் அளித்த புகாரின்பேரில், பட்டாசு ஆலை குத்தகைதாரர் கமல்ராஜ், மேலாளர் மும்மூர்த்தி மற்றும் ஃபோர்மேன்கள் நல்லுச்சாமி, ராமச்சந்திரன் ஆகியோர் மீது, ஆமத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும், பட்டாசு ஆலையை சட்டவிரோதமாக குத்தகைக்குவிட்டது தொடர்பாக, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com