"நீரியா - பெசோவா' குழப்பத்தில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்!

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (நீரி),   பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (நீரி),   பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு  (பெசோ) ஆகிய இரண்டில், எந்த அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி உச்சக்கட்ட குழப்பத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். 
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், சுமார் 216 விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சான்று பெற்றவை. மற்றவை, மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை சான்று பெற்றவையாகும். 
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேதியியல் பொருள்களால் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவா என கண்காணிக்க, பெசோ எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. எனவே, ஒரு ரக பட்டாசு தயாரிக்க வேண்டுமெனில், அந்த பட்டாசின் மாதிரியை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் ஆலை உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அத்துறையினர், அந்த பட்டாசில் சேர்க்கப்பட்டுள்ள வேதியியல் பொருள்களின் தன்மை, ஒளி மற்றும் ஒலி அளவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்து, அந்த ரக பட்டாசினை தயாரிக்கலாம் என ஒப்புதல் அளித்தால் மட்டுமே, பட்டாசு தயாரிக்க முடியும். அந்த அளவுக்கு பட்டாசு தயாரிக்க கடுமையான விதிமுறைகள் உள்ளன.
இதனிடையே, தில்லியைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2015 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,  காற்றில் மாசு அதிகரிப்பதால் பட்டாசுகளை வெடிக்க தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். அதன்படி, பட்டாசுக்கான எந்தெந்த மருந்துக் கலவைகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை அடிப்படையில், பட்டாசு 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கவேண்டும், பட்டாசில் பேரியம் வேதிப் பொருள் சேர்க்கக் கூடாது, சரவெடி தயாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும், இனிவரும் காலங்களில் பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
பின்னர் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் ஆகியன, பட்டாசு உற்பத்தியில் மாசினை குறைக்க வேண்டிய ஆய்வுகளை தொடங்க "நீரி' என்ற அமைப்புக்கு உத்தரவிட்டன. புதிய தொழில்நுட்பத்தில் பங்குபெறும் விதமாக, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது, பசுமை பட்டாசு ஆய்வுக்காக, சிவகாசியில் ஒரு ஆய்வுக் கூடத்தையும் நீரிஅமைத்துள்ளது.
ஏற்கெனவே, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் விதிகளின்படி பட்டாசு தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டால் மட்டுமே பசுமை பட்டாசுக்கான தொழில்நுட்பத்தை வழங்குவோம் என நீரி அமைப்பு வியாபாரமாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. 
இது குறித்து பட்டாசு தயாரிப்பாளர் ஒருவர் கூறியது: நீரி என்ற அமைப்பு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டுறவு அமைப்பாகும். சிவகாசியில் நடைபெற்ற நீரி ஆய்வுக்கூடத் திறப்பு விழாவில் மிகவும் குறைந்த அளவிலான பட்டாசு உற்பத்தியாளர்களே கலந்துகொண்டனர். இதன்மூலம், அந்த அமைப்புக்கு வரவேற்பு இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தற்போது, பசுமை பட்டாசு குறித்த தொழில்நுட்பத்தை நீரி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, இனி யாரும் நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யத் தேவை இல்லை. மேலும், நீரி பசுமை பட்டாசு குறித்து தனது ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் சட்டப்படி பட்டாசு தயாரிக்க வேண்டுமா அல்லது நீரி அமைப்பு தெரிவித்துவரும் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்க வேண்டுமா என மிகவும் குழப்பமாக உள்ளது. 
ஏற்கெனவே, சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் பட்டாசு குறித்து ஆய்வு செய்ய ஆய்வகம் உள்ளபோது, நீரி அமைப்பு சிவகாசியில் ஏன் ஒரு ஆய்வகத்தை திறந்துள்ளது எனவும் புரியவில்லை. இந்த குழப்பத்தை யார் தீர்க்கப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com