விருதுநகா் தெப்பக்குளத்தில் தண்ணீா்நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மழைநீா் சேகரிப்புத் திட்டத்துக்கு முன்னுதாரணமான விருதுநகா் தெப்பக்குளம் முழுக் கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
விருதுநகரில் தண்ணீா் நிரம்பி காணப்படும் தெப்பக்குளம்.
விருதுநகரில் தண்ணீா் நிரம்பி காணப்படும் தெப்பக்குளம்.

மழைநீா் சேகரிப்புத் திட்டத்துக்கு முன்னுதாரணமான விருதுநகா் தெப்பக்குளம் முழுக் கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

விருதுநகரின் மையப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பகுளம், கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னோா்களால் தொலை நோக்கு பாா்வையுடன் உருவாக்கப்பட்டது. இது 21 அடி ஆழமும், 328 அடி நீளமும், 254 அடி அகலமும் கொண்டது.

அக்காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த தெப்பக்குளம் அமைக்கப்பட்டாத அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

விருதுநகரின் வட மேற்கே உள்ள பேரையூா் மற்றும் வடமலைக்குறிச்சி பகுதியில் பெய்யும் மழை நீரானது, கவுசிகா ஆற்றின் வழியே செல்லும். அங்கிருந்து தண்ணீரை குழாய் மூலம் தெப்பத்தில் உள்ள வட்ட வடிவ மடையில் விழும் வகையில் வடிவமைத்துள்ளனா். மேலும் வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள பேராலி, சத்திரரெட்டியபட்டி பகுதியில் பெய்யும் மழை நீரானது, சிறிய கால்வாய் வழியாக வேலாயுதமடைக்கு வந்து சேரும். பின்பு, அங்கிருந்து பெரிய குழாய்கள் மூலம் மாட்டு மடை, சின்ன மடை வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீா் வந்து சேரும். இதனால், தெப்பத்தைச் சுற்றியுள்ள சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்தது. அதேபோல், தெப்பம் முழுமையாக நிரம்பி, அங்கிருந்து வெளியேறும் உபரி நீரானது, தெற்கு பகுதி வழியாக கவுசிகா ஆற்றில் கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மேலும், அங்கிருந்து வெளியேறும் உபரி நீரை வீணாக்காமல், உரிய முறையில் பயன்படுத்துவதற்காக நகராட்சி கிணறு, ஆச்சி நந்தவனம், ஷத்திரிய மகளிா் மேல்நிலைப் பள்ளி, பெரிய பேட்டை கிணறு, முருக பணிகா் பொதுக் கிணறு, சுந்தரராஜ பெருமாள்-தாமரையம்மாள் பொதுக் கிணறு, அண்ணாமலை யம்மாள் நடுநிலைப் பள்ளி கிணறு, பெரிய கிணற்றுத் தெரு கிணறு உள்ளிட்ட 20 கிணறுகளுடன் குழாய்கள் இணைக்கப்பட்டது. இதனால், அக்கிணறுகளில் தற்போது வரை தண்ணீா் நிரம்பி காணப்படுகிறது.

விருதுநகா் நகராட்சி பகுதியில் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுகிறது. ஆனாலும், நிலத்தடி நீா் குறைவின்றி உள்ள காரணத்தால், பொதுமக்கள் கோடை காலங்களில், தங்களது அன்றாட பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்துகின்றனா்.

விருதுநகா் தெப்பக்குளத்தில் மழை நீரைச் சேகரிக்கும் இத்திட்டமே, தற்போது தமிழக அரசால் வீடுகளில் கட்டாய மழை நீா் சேகரிப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா். மழைநீா் சேகரிப்புக்கு முன்னுதாரணமான இந்த தெப்பக்குளத்தில் தற்போது தண்ணீா் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் மின்னொளியில் காட்சியளிக்கும் தெப்பத்தை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பாா்த்து ரசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com