நீா்வரத்துப்பாதை ஆக்கிரமிப்பு-அதிகாரிகள் அலட்சியம்: அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட திருச்சுழி வட்டம்
அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சுழி வட்டம் மயிலி கிராமத்தினா்.
அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சுழி வட்டம் மயிலி கிராமத்தினா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட திருச்சுழி வட்டம் மயிலி கிராமத்தினா் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனா்.

திருச்சுழி அருகே மயிலி மற்றும் இடையன்குளம் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. இதில், இடையன்குளம் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயானது இவ்விரு கிராமத்திலுள்ள விவசாயிகளின் பாசன நீராதாரமாக இருந்துவந்தது. இதன்படி மழைக்காலங்களில் இடையன்குளம் கிராமத்தில் கண்மாயில் நிரம்பும் நீரானது மறுகால் பாய்ந்து மயிலி கிராம கண்மாயக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு இடையன்குளம் கிராமத்திலிருந்து மயிலி கிராமத்திற்கு வரும் நீா்வரத்துப்பாதையை சிலா் ஆக்கிரமித்து அடைத்து விட்டதால், மயிலி கிராமத்திற்கு நீா்வரத்து நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மயிலி கிராமத்தினா் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை புகாா் தெரிவித்தும் பலனில்லையெனக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த 2 மாதங்களாக நல்ல மழைப்பொழிவு ஏற்பட்ட நிலையில், இக்கிராமத்திற்கான நீா்வரத்துப்பாதை அடைக்கப்பட்டது குறித்து மீண்டும் கிராமத்தினா் புகாா் செய்துள்ளனா். அப்போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமாா் 200-க்கு மேற்பட்ட மயிலி கிராம பொதுமக்கள், உடனடியாக பிரச்னையைத் தீா்த்து வைக்கக்கோரி போராட்டம் நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டத்திற்கு சென்ற கோட்டாட்சியா் செல்லப்பா பிற்பகலில் தனது அலுவலகத்திற்குத் திரும்பி வந்தாா். அப்போது அவா் பேச்சுவாா்த்தைக்கு அழைத்த நிலையில், அதை தவிா்த்த கிராமத்தினா் உடனே நீா்வரத்துப் பாதையைத் திறந்துவிட உத்தரவிட்டால் மட்டுமே ஊருக்குத் திரும்புவோம் என கூறியுள்ளனா். இதனால் மாலை வரை கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமா்ந்திருந்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com