விருதுநகரில் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்க 5 இடங்கள் தேர்வு

விருதுநகரில் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

விருதுநகரில் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
 விருதுநகரில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 73 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக நாள்தோறும் 40 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. மேலும், இப்பகுதியில் செல்லும் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து விடு வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. 
எனவே, ஒரே இடத்தில் அனைத்து குப்பைகளையும் கொட்டாமல், மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளில் வாங்க வேண்டும். அதில், மக்கும் குப்பைகளை அந்தந்த பகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க வேண்டும் என நகராட்சி ஆய்வாளர்களுக்கு, ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மக்காத குப்பைகளை, சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி கூறியது: விருதுநகர் நகராட்சிக்கு 57 பேட்டரி பொருத்திய மூன்று சக்கர சைக்கிள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வண்டிக்கு இரண்டு பேர் வீதம் தினந்தோறும் வீடுகளுக்கு குப்பைகள் வாங்க செல்ல வேண்டும்.
 அதில், பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும். இதில், மக்கும் குப்பைகளை புல்லலக்கோட்டை சாலை, சவுந்திரபாண்டியன் சாலை, ரயில்வே பீடர் சாலை, கல்லூரி சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலையில் உள்ள இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க உள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் தினந்தோறும் தலா 5 டன் குப்பைகள் உரமாக்கப்பட உள்ளது. இதை மிகக் குறைந்த விலைக்கு அல்லது இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க உள்ளோம். அதேபோல், மக்காத குப்பைகளிலிருந்து டீசலுக்கு நிகரான திரவம் தயாரித்து, அதை அலுவலக ஜெனரேட்டர் மற்றும் தண்ணீர் மோட்டார்களை இயக்க பயன்படுத்த திட்டமிட் டுள்ளோம். மேலும், மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பசுமை சோலையாக மாற்ற மரக்கன்றுகள் நடவுள்ளோம். எனவே, பொதுமக்கள் இனிமேல் குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com