சிவகாசியில் சிறிய விளையாட்டு அரங்கம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

சிவகாசியில் கட்டப்பட்டுள்ள சிறிய விளையாட்டு அரங்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகாசியில் கட்டப்பட்டுள்ள சிறிய விளையாட்டு அரங்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகாசி ஊரராட்சி ஒன்றியம் ஆனையூர் ஊராட்சியில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே சுமார் 7 ஏக்கர் பரப்பில் சிறிய விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் கடந்த 2006 ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. மத்திய அரசு நிதி 
ரூ. 15 லட்சம், மாநில அரசு நிதி 
ரூ. 7.50 லட்சம், பொதுமக்கள் பங்களிப்பு ரூ. 7.50 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் செலவில் இந்த விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டது.  
இதில் 100, 200, 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கானைகள் ஓய்வு அறைகள், சுமார் 1000 பார்வையாளர்கள் அமரக் கூடிய மாடம் (கேலரி) உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
மேலும் தண்ணீர் , கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த அரங்கம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு முதல் பயன்பாடின்றி இருந்து வருகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள், விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படுகிறது.
அது போல கோட்ட அளவில், குறு வட்ட அளவிலான போட்டிகளை நடத்த இந்த அரங்கினை பயன்படுத்தவேண்டும்  என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விளையாட்டு அரங்கைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர, சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலிருந்து, இதற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். தினசரி நடை பயிற்சிக்கு செல்வோர் இதை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். 
மேலும் கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, முறையான பயிற்சியாளர் நியமித்து, இலவசமாக சரிவிகித உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த விளையாட்டு அரங்கிற்கு பல ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்தது. 2016-2017 ஆண்டு தன்னிறைவு திட்டத்தின்கீழ் அரசு நிதி ரூ. 8.33 லட்சம், பொதுமக்கள் பங்களிப்பாக சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் ரூ. 8.67 லட்சம் என மொத்தம் ரூ.17லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வசதிகளும் கொண்ட இந்த அரங்கை பயன்பாட்டிற்குக் கொண்டு வர மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com