விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 05th January 2019 02:05 AM | Last Updated : 05th January 2019 02:05 AM | அ+அ அ- |

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, ஒ.கோயில்பட்டி கிராம மக்கள் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒ.கோயில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் 150 பேர், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்களில் பலர் தூய்மை காவலராகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், கிராமப் பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 210 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதை, படிப்படியாகக் குறைத்து தற்போது ஒரு நபருக்கு ரூ. 50 சம்பளம் வழங்கியுள்ளனர். இதனால், விவசாயத்
தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள் பணி செய்ய மறுத்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக இக்கிராமத்தில் நூறு நாள் பணி நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. எனவே, விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ. 210 சம்பளம் வழங்க வேண்டும் என, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் சந்திரமோகன் தலைமையில், தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விரைவில் அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.