ராஜபாளையத்தில் சொத்துத் தகராறில் முதியவர் கொலை 3 ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சொத்துக்காக கடந்த 2016 இல் முதியவர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சொத்துக்காக கடந்த 2016 இல் முதியவர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
ராஜபாளையம் ஐஎன்டியுசி காலனியை சேர்ந்தவர் ஜெகநாதராஜா(58). இவரது மனைவி சொக்கத்தாய் (55). இவர்களது மகள் ப்ரியா(31) கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ஜெகநாதராஜாவுக்கு ரூ. 200 கோடியில் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சொக்கத்தாய்க்கு ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் (52), கருப்பையா(58) ஆகியோருடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மகள் ப்ரியாவும் சத்தியகுமார் (34) என்பவருடன் பழகி வந்துள்ளார். 
இதை அறிந்த ஜெகநாதராஜா, மனைவி, மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில் தனது சொ த்துக்களை கோயில் அல்லது அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 
இதனால், சொக்கத்தாய், ப்ரியா ஆகிய இருவரும் ராமராஜ், சத்தியகுமார், கருப்பையா ஆகியோர் உதவியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜெகநாதராஜவை  கட் டையால் தாக்கி கொலை செய்துள்ளனர்.  ஆனால், ஜெகந்நாதராஜ உடல் நிலை சரியில்லாமல் மாடியில் இருந்து தவறி விழுந்ததால், அடிபட்டதில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடியுள்ளனர். 
இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார்,  அப்போது 174 பிரிவில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஜெகநாதராஜாவின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது தம்பி ராதா கிருஷ்ணராஜா (54) என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்தார். 
இதில் நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தகாத உறவு மற்றும் சொத்துக்காக மனைவி, மகள் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து ஜெகந்நாதராஜாவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதில், ராமராஜ், சத்தியகுமாரை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், கருப்பையா என்பவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். சொக்கத்தாய், ப்ரியா இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.
மற்றொரு வழக்கில் 6 பேர் கைது: அதேபோல், இருக்கன்குடி கோயிலில் ஆடு உரிக்கும் போட்டியில் ஏற்பட்ட தகராறில் தாய்மாமன் உள்பட எட்டு பேர் சேர்ந்து மருமகன் கற்பகராஜ் என்பவரை கொலை செய்தனர். இந்த வழக்கில் 6 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com