20 சதவீத குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்பு : ஆட்சியர் 

உலக மக்கள் தொகையில் 42 சதவீதம் குழந்தைகள் உள்ளனர். அதில், 20 சதவீத குழந்தைகள் பாலியல்ரீதியான

உலக மக்கள் தொகையில் 42 சதவீதம் குழந்தைகள் உள்ளனர். அதில், 20 சதவீத குழந்தைகள் பாலியல்ரீதியான பாதிப்புக்குள்ளாகின்றனர் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.
 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகளின் நலன் காக்கும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:  விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில் இதுபோன்ற திறன்வளர்ப்பு பயிற்சிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 
குழந்தைகளின் நலன் காக்கும் சட்டங்களான குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் முறைப்படுத்தல்) சட்டம், குழந்தைத் திருமண தடைச் சட்டம், இளைஞர் நீதிச் சட்டம், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் குறித்து அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பயிற்சி முதற்கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. 
உலக மக்கள் தொகையில் 42 சதவீதம் குழந்தைகள் உள்ளனர். அதில், சுமார் 20 சதவீத குழந்தைகள் உடல் ரீதியாக, மனரீதியாக, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், குடும்பம் மற்றும் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்களினால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து எடுத்துக் கூற வேண்டும். சமூகத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க அனைவரும் முன்வர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலனை நன்கு அறிந்து அவர்களின் திறமைக்கேற்ப கல்வி கற்பிக்கவேண்டும். மேலும், குழந்தைகளின் திறமைகளை அறிந்து தன்னம்பிக்கை, விடாமுயற்சி அளித்து ஊக்கப்படுத்தினாலே, அவர்கள் தாமாகவே முன்னேறிவிடுவார்கள் என்றார். 
முன்னதாக, இளைஞர் நீதிக் குழுமத்தில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய நான்கு சிறார்களின் சுய வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்விற்காக மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், வீடியோ கேமரா, இசைக்கருவி என ரூ.84,874 மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இப்பயிற்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பா.கணேசன், குழந்தைகள் எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த  பிரச்னைகளை கையாளும் வழிமுறைகள் குறித்து செல்லமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினர். 
இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி, நன்னடத்தை அலுவலர் முருகன் மற்றும் விருதுநகர் ஒன்றியங்களில் பணிபுரியும் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com