வீரக்குடும்பன்பட்டியில் மழை இல்லாமல் கருகும் பப்பாளி மரக்கன்றுகள்

விருதுநகர் அருகே வீரக்குடும்பன்பட்டியில் கிணற்று பாசனத்தில் நடப்பட்ட பப்பாளி மரக்கன்றுகள், மழை இல்லாததால் கருகத் தொடங்கி விட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


விருதுநகர் அருகே வீரக்குடும்பன்பட்டியில் கிணற்று பாசனத்தில் நடப்பட்ட பப்பாளி மரக்கன்றுகள், மழை இல்லாததால் கருகத் தொடங்கி விட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமி என்பதால் இப்பகுதியில் மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர் கிணற்று பாசனம் மூலம் கத்தரி, வெண்டை, மிளகாய், பப்பாளி முதலான விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டு பருவமழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விருதுநகர் அருகே வீரக்குடும்பன்பட்டியில் கிணற்று பாசனத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ரெட் லேடி எனப்படும் ஒட்டு ரக பப்பாளி அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நடவு செய்துள்ளனர். ஓராண்டில் பலன் தரக் கூடிய இந்த பப்பாளி மரக்கன்றுகள் போதிய மழை இல்லாததால் கருகி வாடத் தொடங்கி விட்டன. இதனால், வாரத்திற்கு சுமார் 200 கிலோ வரை கிடைக்கக் கூடிய பப்பாளி, 50 கிலோ கிடைப்பதே அரிதாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், செலவு செய்த பணத்தில் பாதியளவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
 இதுகுறித்து விவசாயி முனியாண்டி கூறியது: கிணற்று பாசனம் மூலம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒட்டு ரக பப்பாளி மரக்கன்றுகள் நடவு செய்தேன். ஒரு மரக்கன்று ரூ. 20 வீதம் விலைக்கு வாங்கி, 1200 பப்பாளி மரக்கன்றுகள் நடவுசெய்துள்ளேன். ஓராண்டுக்கு பின்னர் மூன்று ஆண்டுகள் வரை பலன் தரும். ஆனால், தற்போது நடவு செய்யப்பட் ட பப்பாளி மரக்கன்றுகள் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. வாரத்திற்கு ஒரு முறை சுமார் 200 கிலோ வரை பப்பா ளி கிடைக்கும். 
 ஆனால், மழை இல்லாததால் வறட்சி காரணமாக மிகக் குறைவாக 50 கிலோ வரை மட்டுமே கிடைத்தது. தற்போது, கிணற்றிலும் தண்ணீர் இல்லாததால், பப்பாளி மரக்கன்றுகள் கருகத் தொடங்கி விட்டன. இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் பப்பாளி பயிருக்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். ஆனால், இதுவரை ரூ. 50 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், தற்போது பப்பாளி நிறம் மாறி குறுகி இருப்பதால் வியாபாரிகளும் வாங்க மறுக்கின்றனர். பப்பாளிக்கு காப்பீட்டு தொகையும் செலுத்த முடியாததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய்த்துறை, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com