சிவகாசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 23rd July 2019 06:59 AM | Last Updated : 23rd July 2019 06:59 AM | அ+அ அ- |

சிவகாசி ஒருங்கிங்கிணைந்த நாடார்கள் குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதற்கு நாடார் மஹாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார்.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தையல் இயந்திரம், தேய்ப்புபெட்டி, குடம், வேட்டி சேலை உள்ளிட்டவைகளை 117 பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது: தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையால், கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நாடார் சமூகத்தினர் பல ஊர்களில் கல்விக் கூடங்களை அமைத்து கல்வி சேவை செய்து வருகிறார்கள். தமிழக அரசு மாணவர்களை ஊக்குவிற்பதற்காக விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட 16 வகையான பொருள்களை வழங்கி வருகிறது.
மிதி வண்டி வழங்கப்படுவதால், கிராமப்புற மாணவர்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்து படிக்க வசதியாக உள்ளது.
அரசு நீட்தேர்வு நடத்தியதால் பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் முரளிதரன், பாஸ்கரன், ராஜபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.