விருதுநகர் நகராட்சிக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் செயல்படாமல் முடக்கம்

விருதுநகரில் துப்புரவுப் பணிக்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் ஓட்டுநர் மேற்கூரை மற்றும்

விருதுநகரில் துப்புரவுப் பணிக்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் ஓட்டுநர் மேற்கூரை மற்றும் எலக்ட்ரிக் பணிகள் செய்யப்படாததால் பயன்படுத்த முடியாமல் ஆணையாளர் குடியிருப்புப் பகுதியில் காட்சி பொருளாக உள்ளன.
 விருதுநகர் நகராட்சி சுகாதாரப் பிரிவில் நான்கு துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 87 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 47 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இந்நிலையில், விருதுநகர் பகுதியை குப்பை இல்லாத நகராக மாற்றப்பட உள்ளதாக ஆணையாளர் அறிவித்தார். இதைத்தொ டர்ந்து நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. மேலும், குப்பைகளை சம்பந்தப்பட்டோர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்காக கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் குறிப்பிட்ட தொகையை வரியாக வாங்கி வந்தனர். 
இந்த நிலையில், குறுகிய தெருக்கள், சாலைகளில் எளிதில் சென்று குப்பைகளை வாங்குவதற்காக 57 பேட்டரி வாகனங்கள் வாங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ. 72 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த பேட்டரி வாகனங்களை ஈரோட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த நிறுவனம் சார்பில் விருதுநகர் நகராட்சிக்கு 20 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் வாகனம் ஓட்டுநர் அமரும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்ட வில்லை. மேலும், எலக்ட்ரிக்கல் பணிகளும் முழுமையாக நிறைவு பெறவில்லை. இப்பணிகளை சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் விரைந்து முடித்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பல லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைகளை வாங்குவதிலும் காலதாமதம் ஏற்படும். எனவே, பேட்டரி வாகனங்களில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
பேட்டரி வாகனங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்திடம் ஊழியர்களை அனுப்பி வாகனங்கள் முழுமையாக இயங்கும் வகையில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து தர அறிவுறுத்தியுள்ளோம். அதன் பின்னரே வாகனங்களை துப்புரவுப் பணியாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com