விருதுநகரில் குடிநீரில் கழிவுநீர்: ஆணையர் வீட்டை பெண்கள் முற்றுகை
By DIN | Published On : 14th June 2019 07:54 AM | Last Updated : 14th June 2019 07:54 AM | அ+அ அ- |

விருதுநகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி, அப்பகுதி பெண்கள் நகராட்சி ஆணையர் வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் கம்மாபட்டி தெருவில் 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பாதாளச் சாக்கடைத் தொட்டியில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்காக, துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், சாக்கடைத் தொட்டி அடைப்பை கண்டறிய முடியாமல், அப்பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக இந்த தடுப்பு வேலிகள் உள்ளதால், இச்சாலையில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவிகள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், இங்கு கழிவுநீர் செல்லும் வாருகால் பகுதியில் குடிநீர்க் குழாய் பதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும் நிலையில், அதில் கழிவுநீர் கலந்து வருவதால் பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து நகராட்சிப் பொறியியல் துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், வியாழக்கிழமை நகராட்சி ஆணையர் குடியிருப்பை முற்றுகையிட்டனர். அதையடுத்து, அங்கு வந்த ஆணையர் பார்த்தசாரதி, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், கம்மாபட்டி பகுதி பெண்கள் கலைந்து சென்றனர்.