குல்லூர்சந்தை அணையை தூர்வார வியாபார தொழில் துறை கோரிக்கை
By DIN | Published On : 23rd June 2019 12:44 AM | Last Updated : 23rd June 2019 12:44 AM | அ+அ அ- |

விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை அணை மற்றும் நீர்வரத்து வழிகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் வியாபாரத் தொழில் துறை சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ்.யோகன் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பருவ மழை இல்லாததால் கடும் வறட்சியால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக் காலம் தொடங்குவதற்குள் குல்லூர் சந்தை அணை மற்றும் நீர் வரத்து வழிகளை தூர் வாரி அதில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி பகுதியிலிருந்து வர கூடிய வெளியூர் பேருந்துகள், விருதுநகருக்குள் வருவதில்லை. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எம்.ஜி.ஆர். சாலை வழியாக அனைத்து வெளியூர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஜார் வழியாக வரும் பேருந்துகளால் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, முன்பு போல பாவாலி சாலை, பாத்திமா நகர் ஆத்துப்பாலம் வழியாக இயக்க வேண்டும். அல்லம்பட்டியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல், அல்லம்பட்டி வி.வி.ஆர் காலனி பகுதியில் மதுபானக் கடை திறக்க முயற்சி நடைபெறுகிறது. எனவே, மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி, அப்பகுதியில் மதுபானக் கடையை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளார்.