ராஜபாளையம் பெரியகுளம் கண்மாயில் கழிவு நீர் கலப்பதாகப் புகார்
By DIN | Published On : 04th March 2019 07:31 AM | Last Updated : 04th March 2019 07:31 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே பெரியகுளம் கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிருஷ்ணாபுரம்-பெரியகுளம் கண்மாய் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்றாகும். இக்கண்மாயில் இருந்து அயன் கொல்லன் கொண்டான், நக்கனேரி ஊராட்சிகளில் 120 ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இக்கண்மாயில் இருந்து 2000 -க்கு மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் சுந்தரநாச்சியார்புரம், சோலச்சேரி, கிருஷ்ணாபுரம், அயன் கொல்லன் கொண்டான், நக்கனேரி ஊராட்சிகளுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது.
அய்யனார் கோவில் ஆற்று நீர், அலச்சேரி மற்றும் சேத்தூர் பிளவாடி கண்மாய்களின் உபரி நீர் இக்கண்மாய்க்கு வருகிறது.
இந்நிலையில் இதன் தென்மேற்கு பகுதியில் சேத்தூர் பிளவாடி கண்மாயின் உபரி நீர் வரும் வழித்தடத்தில் தனியார் ஆலை கழிவு நீரும், சுந்தரநாச்சியார்புரம், கிருஷ்ணாபுரம் வடக்குத் தெரு, பேருந்து நிறுத்தம், தெற்கு தெரு பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரும் கலக்கின்றன. சுந்தரநாச்சியார்புரம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் சாலையின் இருபுறங்களிலும் கழிவு நீர் தேங்கி, கோரைப் புற்கள் வளர்ந்து குளம் போல காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால், பன்றிகள் மற்றும் கொசுக்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கழிவு நீர் கலப்பதால் கண்மாய் நீர் கருப்பு நிறமாகவும், கரும் பச்சை நிறமாகவும் மாறியுள்ளது. இதனால் இதன் தண்ணீர் சமைப்பதற்கு பயனற்றதாகி விட்டது.
எனவே, இக்கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சு.முத்துக்குமார் மற்றும் இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.