மத்தியில் அமையும் ஆட்சியில் திமுக பங்கேற்கும்: வைகோ
By DIN | Published On : 24th March 2019 12:53 AM | Last Updated : 24th March 2019 12:53 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தல் முடிந்து மத்தியில் வரவிருக்கும் ஆட்சியில் திமுக கூட்டணி பங்கேற்கும் என வைகோ தெரிவித்தார்.
சாத்தூரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.வி.சீனிவாசனை ஆதரித்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை சாத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
சாத்தூர் நகரில் உள்ள முக்குராந்தல், படந்தால், சுப்பிரமணியாபுரம், தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமெனில், ரத்தக் களரி ஏற்படாமல் தடுக்க வேண்டுமெனில் திமுகவுக்கு வாக்களியுங்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரள அரசுக்கு மத்திய பாஜ அரசு பச்சைக் கொடி காட்டியது.
மேலும், மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கொடுத்தது மத்திய பாஜ அரசுதான். எனவே வருகிற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அமையும் ஆட்சியில் திமுக பங்கேற்கும். பட்டாசு, தீப்பெட்டி, விவசாயத் தொழிலை பாதுகாத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவோம். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை காக்கின்ற ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
இதில் திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.