மதுபானக் கடையை அகற்றக் கோரி பெண்கள் மனு
By DIN | Published On : 16th May 2019 07:05 AM | Last Updated : 16th May 2019 07:05 AM | அ+அ அ- |

விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரில் மதுபானக் கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரியிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
விருதுநகரில் ஸ்ரீராம் திரையரங்கம் செல்லும் சாலையில் காமராஜர் சிலை பின்புறம் அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காமராஜர் சிலைக்கு பின்புறம் மதுபானக் கடை செயல்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதில், கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சம்பதப்பட்ட மதுபானக் கடையை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து அப்பகுதி அருகே உள்ள பாரதி நகரில் மதுபானக் கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில், பாரதி நகர் பகுதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியை சேர்ந்த பெண்கள், தற்போது மதுபானக் கடை திறக்க உள்ள பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் மாணவ, மாணவிகளும் இவ்வழியே தான் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இக்கடை திறந்தால் அனைவரும் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படும். எனவே பாரதி நகர் பகுதியில் மதுபானக் கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.