சிவகாசியில் குப்பை கிடங்காக மாறிவரும் பெத்துமரத்து ஊருணி

சிவகாசியில் குப்பைக் கிடங்காக மாறிவரும் பெத்துமரத்து ஊருணியை தூர்வாரி சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிவகாசியில் குப்பைக் கிடங்காக மாறிவரும் பெத்துமரத்து ஊருணியை தூர்வாரி சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே  உள்ளது பெத்துமரத்து ஊருணி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஊருணியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது இந்த ஊருணி கழிவு நீர் கிடங்காகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவர்கள் வழங்கிய நன்கொடை மூலம், இந்த ஊருணியை நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியது.  இரண்டு நாள்கள் இயந்திரம் மூலம் ஊருணியை தூர்வாரும் பணி மட்டும் நடைபெற்றது. அதன் பின்னர்  பணிகள் நடைபெறவில்லை.
விருதுநகரில் ஊரின் நடுவே உள்ள தெப்பத்தை தொழிலதிபர்கள்  இணைந்து, மழைநீரைச் சேகரிக்கும் வகையில் உருவாக்கி விட்டனர். அதனால்  தெப்பம் அப்பகுதியில்  நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. அதேபோல சிவகாசி பெத்துமரத்து ஊருணியை நகராட்சி நிர்வாகம் மற்றும் தொழிலதிபர்கள் இணைந்து, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சிவகாசி பாஜக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி.ஆறுமுகச்சாமி கூறியது: 
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பெத்து மரத்து ஊருணியில் சிறுவர்கள் நீச்சலடித்து குளிப்பார்கள். தற்போது அதில் கழிவு நீர் தேங்கியுள்ளது. நான்குபுறமும் ஊருணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிலர் அந்த ஊருணியில் குப்பை கொட்டி வருவது வேதனைக்குரியது. 
சிவகாசியில் ஏற்கெனவே இருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊருணிகள் தற்போது இல்லை. அதனால் பெத்துமரத்து ஊருணியை  பாதுகாக்க வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், தொழிலதிபர்கள் இணைந்து பெத்துமரத்து ஊருணியை தூர்வாரி சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com