சாத்தூரில் சிறுவர் பூங்காக்களை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சாத்தூரில் உள்ள சிறுவர் பூங்காக்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாத்தூரில் உள்ள சிறுவர் பூங்காக்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பொழுபோக்குக்காக வைப்பாற்று கரையோரம், பெரியார் நகர், அண்ணாநகர், நியூ காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. 
இப்பகுதியில் பொழுதுபோக்குக்கென எவ்வித இடமும் இல்லாத காரணத்தால் நகராட்சி சார்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. பின்னர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பூங்காக்கள் சீரமைக்கப்படாமல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன.
பூங்காக்களை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முழுஅதிகாரமும் நகராட்சி அதிகாரிகள் கையில் இருந்தாலும் பூங்காவை சீரமைக்க எவ்வித நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை.
மேலும் தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் சாத்தூரில் மணல் மேட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 
 இதனால் வைப்பாற்று கரையோரம் உள்ள பூங்கா மட்டும் ஆண்டுதோறும் பெயரளவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. 
மற்ற பூங்காக்கள் பராமரிப்பின்றி உள்ளதால் அங்கு சமூக விரோதச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. எனவே சாத்தூர் பகுதியில் உள்ள அனைத்துப் பூங்காக்களையும் சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் கூறியது: 
 சாத்தூர் பகுதியில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சீரமைக்கப்படாமல் உள்ளது. சாத்தூர் பகுதியில் பொழுபோக்குக்கு திரையரங்குகள் கூட கிடையாது. என்னதான் பொழுதுபோக்கிற்காக தொலைகாட்சி, கணினி உள்ளிட்டவைகள் இருந்தாலும் குழந்தைகள் விடுமுறை நாள்களில் பூங்காவுக்கு வந்து மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் மனதும், உடலும் புத்துணர்ச்சி பெறும். எனவே இந்த பூங்காக்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com